எல்லோராலும் தேடப்படும் இவர்
காணாமல் போனவரோ!
குற்றவாளியோ!
கருத்த முகத்தில்
கருவாய் நீ வருவாய்
என அறியா வேளையே
உயிராய் உருவான
உவகை ஊற்றே!
அழாமல் அவள்
பெற்றெடுக்க
பிறந்ததும் அழாமல்
அழவைத்த அழகே!
எனக்கும் உனக்கும்
இடையில் இல்லை
எவரும் என்கையிலே
நடுவில் வந்து
நகைக்கும் நாரதரே!
கையிற் கடவுளே
மடியில் மேகமே
நாற்காலில் நாட்டியமே
இருகாலில் இலவமே
நீ துளிர்த்த
நாள் நகர்ந்து
ஆண்டொன்று ஆனதென
நாட்காட்டி சொன்னாலும்
நெஞ்சமென்னமோ நிற்கிறது
உனைப்பார்த்த அந்த நொடியிலேயே…
பேரழகு படைத்த
ஓரழகே! உன்
ஒவ்வொரு நொடியும்
உன்மனம்போல் அமையட்டும்
அவனருளால்…
தானே சுற்றும் கடிகார முள்ளை
கையில் பிடித்து நீ சுற்ற…
காதல் செய்
எப்ப பாத்தாலும்
தூங்கிட்டே இருக்கியேடா?
என்று திட்டும் அம்மாவிற்காக…
தூக்கம் என்றால் என்ன
என்று கேட்க…
காதல் செய்…
இரவு பகலாக…
பகல் இரவாக…
காதல் செய்.
தனிமையின் தன்மை
அறிய… காதல் செய்…
எண்ணத்தை எழுத்தாக்க
காதல் செய்…
என்னைப் பார்… என்னைப் பார்…
என்று அழும் கண்ணாடிக்காக…
காதல் செய்…
தலை கோதியே
கை ரேகை அழிந்து போக
காதல் செய்…
கனவுகளோடு இரவுகள்
கழிக்க… காதல் செய்…
ஊரே சிரித்தாலும்
உன் காதில் விழாமலிருக்க
காதல் செய்…
உனக்கே கேட்காமல்
உனக்குள் நீ சிரிக்க…
காதல் செய்…
உனக்கே நீ அழகாய் தெரிய…
காதல் செய்…
நீயாய் நீயும்
நானாய் நானும்
அவ்வப்போதிருப்பதால்
நாமாய் நாம்
அழகாயிருக்கிறோம்
அன்யோன்யமாய்….